< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் 4 நகரங்களில் வெளியானது டிஜிட்டல் கரன்சி

Image Courtesy: PTI

தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 நகரங்களில் வெளியானது டிஜிட்டல் கரன்சி

தினத்தந்தி
|
1 Dec 2022 8:46 PM IST

டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி இன்று வெளியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது நாணயங்கள் மற்றும் காகித வடிவத்தில் பணம் புழக்கத்தில் உள்ளது. மாறி வரும் நவீன யுகத்தில் கிரிப்டோ கரன்சியின் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது. மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் இந்த கிரிப்டோகரன்சி இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது.

நைஜீரியா, ஜமைக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் ஏற்கனவே டிஜிட்டல் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டின்போது ரிசர்வ் வங்கி ஆதரவுடன் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தபடும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி சில்லரை வர்த்தகத்தில் சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி இன்று வெளியானது. 4 நகரங்களை தொடர்ந்து விரைவில் அகமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், காங்டாக், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா ஆகிய 9 நகரங்களில் இந்த முறை விரிவுப்படுத்தப்படும் என ரிசர்வ வங்கி தெரிவித்து உள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த டிஜிட்டல் கரன்சி நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. ஆகிய 4 வங்கிகள் இந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பரோடா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. மற்றும் கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளன.

மேலும் செய்திகள்