< Back
தேசிய செய்திகள்
ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி
தேசிய செய்திகள்

ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி

தினத்தந்தி
|
2 Aug 2023 1:53 AM IST

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தபிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்திவருகிறார்கள் அல்லது ரூ.500, ரூ.100 நோட்டுகளாக மாற்றிப் பெறுகிறார்கள்.

88 சதவீதம்

இந்த நிலையில், கடந்த ஜூலை 31-ந் தேதி வரை, பொது புழக்கத்தில் இருந்த ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டன. இது, கடந்த மே 19-ந் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 88 சதவீதம் ஆகும். வங்கிகள் தெரிவித்துள்ள புள்ளிவிவரத்தின்படி இது தெரியவந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், தற்போது ரூ.42 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் மட்டுமே மக்களிடம் உள்ளன.

திரும்பிவந்த நோட்டுகளில்...

கடந்த மார்ச் 31-ந் தேதி பொது சுழற்சியில் ரூ.3.62 லட்சம் கோடியாக இருந்த ரூ.2000 நோட்டுகள், மே 19-ந் தேதி ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்தன. வங்கிகளுக்கு திரும்பிவந்த ரூ.2000 நோட்டுகளில் 87 சதவீதம் நோட்டுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. 13 சதவீத நோட்டுகள், பிற மதிப்பு நோட்டுகளுக்கு மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.

கடைசிநேர நெரிசலைத் தவிர்க்க

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கடைசி நாளான வருகிற செப்டம்பர் 30-ந் தேதியின்போது ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு, இந்த 2 மாதங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்