< Back
தேசிய செய்திகள்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் - சக்திகாந்த தாஸ்
தேசிய செய்திகள்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் - சக்திகாந்த தாஸ்

தினத்தந்தி
|
5 Aug 2022 2:39 PM IST

பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், விரைவில் குறையும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி(இன்று) முடிவடைந்தது. இந்த கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி நடந்த விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு கீழ் வைத்திருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் வட்டி விகிதம் உயர்த்தபட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரிக்கபட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி ரெப்போ வட்டி 0.5 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சக்திகாந்த தாஸ், பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்யும் என்று அவர் கூறினார். இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்கவும், அந்நிய செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் மதிப்பீட்டின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4.7 சதவீதம் சரிவடைந்தாலும், பல ஆசிய நாடுகளை விட ரூபாயின் மதிப்பு சிறப்பாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும், விரைவில் குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்