அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
|அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம் அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் அடிவாங்கிய நிலையில் ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் தற்போது ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும்.
இந்தநிலையில், இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்க வே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என்றும் பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இரக்கத்தால் எப்பி ஓவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம்' என அதானி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.