ரத்தன் டாடா மறைவு; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
|ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை,
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ரத்தன் டாடாவின் மறைவால், கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார்.
அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ரத்தன் டாடாவுடன் நான் மேற்கொண்ட எண்ணற்ற சந்திப்புகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம். அவருடைய சிந்தனைகள் மிகவும் செழுமையாக இருந்ததைக் கண்டேன். நான் டெல்லி வந்தபோதும் இந்த சந்திப்புகள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.