25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: ஆச்சரியத்தில் குடும்பத்தினர்
|25 விரல்களுடன் பிறந்த குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இதை பார்த்து டாக்டர்களும், பாரதி மற்றும் அவரது குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், "பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை" என்றனர்.