பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைதுசெய்யக்கோரி இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.!
|உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
மீரட்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த போலீசார், அப்பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அப்போது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பெண்ணிடம் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
சரூர்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, பாலியல் வன்கொடுமை சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. அப்போது மைனராக இருந்த அப்பெண், தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், சம்பவம் நடந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் அப்பகுதியில் இல்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சரூர்பூர் காவல் நிலையத்துடன் தொடர்புடையது என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.