பெண் பாலியல் பலாத்காரம், பின் திருமணம்... நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
|பாலியல் பலாத்காரத்திற்கு பின், பெண்ணை திருமணம் செய்து, குழந்தையும் பெற்று கொண்ட நபருக்கு சிறப்பு கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
நாட்டில் விசித்திர வழக்குகள் விசாரணைக்கு வருவது அதிகம். இவற்றில் பாலியல் பலாத்காரம் சார்ந்த வழக்குகளும் அடங்கும். இதில், பெண் ஒருவரை இளம் வயதில் பலாத்காரம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்த நபருக்கு தண்டனை கிடைத்து உள்ளது.
குற்றவாளியான அந்த நபரும், இளம்பெண்ணும் மும்பையில் கிழக்கு புறநகர் பகுதியில் ஒரே பகுதியில் தங்களது குடும்பத்துடன் வசித்து வந்து உள்ளனர். இளம்பெண்ணின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் அந்த நபர் குடியிருந்து உள்ளார். இருவரும் காதல் வசப்பட்டு உள்ளனர். இவர்களது உறவு பற்றி இரு வீட்டாருக்கும் நன்றாக தெரியும்.
இந்த நிலையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அந்த பெண்ணிடம், அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு, ஒன்றாக பேசலாம் என கூறி, வரும்படி அந்த நபர் அழைத்து உள்ளார். அந்த பெண்ணும் சென்றுள்ளார்.
அப்போது, அந்த நபர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால், தரையில் கிடந்த கூர்மையான ஆயுதம் கொண்டு அந்த நபரின் அந்தரங்க உறுப்பை தாக்கி விட்டு, அந்த பெண் தப்பி சென்று விட்டார்.
வீட்டுக்கு வந்த பின் நடந்த விசயங்களை கூறியுள்ளார். இதன்பின் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவானது. வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக, 2021-ம் ஆண்டு கோர்ட்டில், அந்த நபரை திருமணம் செய்ய தயாராக இல்லை என பெண் கூறியுள்ளார்.
இதனடிப்படையிலும், சான்றுகளின்படியும், பெண்ணை பலாத்காரம் செய்ய அந்நபர் முயன்றிருக்கிறார் என கோர்ட்டு முடிவு செய்தது. எனினும், வழக்கின் இறுதியில், அந்த நபர் கோர்ட்டில், பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்றும், தங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஜாமீன் வழங்குவதற்கு 18 மாதம் முன்பே சிறையில் இருந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆனால், அரசு வழக்கறிஞரான கீதா சர்மா, சான்றுகள் முன்பே நிரூபிக்கப்பட்டு விட்டன. அதனால், அவற்றை மீண்டும் சரிபார்க்க முடியாது என கூறியதுடன், தவறு நடந்து உள்ளது என நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த விசயத்தில் கருணை காட்டுவது, மோசம் வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகி விடும்.
பலாத்கார குற்றவாளி, தண்டனையை தவிர்க்க எளிதில் திருமணம் செய்து கொண்டு போய் விடுவார் என வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட பின்னர், குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணம், பின்னர் ஒரு குழந்தை என இந்த நோக்கத்திற்காக குற்றவாளி தப்பிக்க முடியாது என கூறி கோர்ட்டு, அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.