உடுப்பியில் சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
|உடுப்பி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வட மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
உடுப்பி-
உடுப்பி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வட மாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வட மாநில தொழிலாளி
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் முபிசுல் ஷேக் (வயது26). இவர் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா படுபித்ரி பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் அதேப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் முபிசுல், தொழிலாளி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை தொழிலாளியின் வீட்டிற்கு முபிசுல் சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.
இதையடுத்து தொழிலாளியின் 5 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். முபிசுல் ஷேக், சிறுமியிடம் பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் சிறுமியை, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை முபிசுல் மிரட்டியுள்ளார்.
வாலிபர் கைது
இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது சிறுமியை காணவில்லை. இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சிறுமி அழுது கொண்டே வந்தாள்.
அவளிடம் பெற்றோர் கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கூறினாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து படுபித்ரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் படுபித்ரியில் பதுங்கி இருந்த முபிசுலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.