மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம்; வியாபாரி கைது
|மங்களூருவில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரியையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பனின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு :-
வியாபாரி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹலீம்(வயது 37). இவர் மும்பையில் வசித்து வந்தார். இவருக்கும், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கும் வியாபார விஷயமாக பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அதையடுத்து அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து கடந்த 10-ந் தேதி இருவரும் மோட்டார் சைக்கிளில் மங்களூருவுக்கு புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளை அப்துல் ஹலீம் ஓட்ட, அவரது நண்பரான அந்த வியாபாரி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் மங்களூரு அருகே ஹொசஅங்கடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர். இதில் அந்த வியாபாரி
பலத்த காயம் அடைந்தார். அப்துல் ஹலீம் லேசாக காயங்களுடன் தப்பினார். அதையடுத்து இருவரும் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாலியல் பலாத்காரம்
இருவரும் ஒரே அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரது படுக்கைக்கு அருகே ஒரு திரை மட்டும் போடப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று அந்த வியாபாரியின் அக்காள் தனது 2 மகள்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.
அதில் ஒரு சிறுமி மாற்றுத்திறனாளி ஆவாள். சிறிது நேரம் அங்கிருந்த வியாபாரியின் அக்காள், போலீஸ் நிலையத்திற்கு சென்று விபத்து வழக்கு தொடர்பாக விசாரிக்க தனது மூத்த மகளுடன் சென்றிருந்தார். மாற்றுத்திறன் கொண்ட இளைய மகளை தனது தம்பியான வியாபாரியின் மனைவி ஷகிமா பானுவின் பாதுகாப்பில் விட்டுச் சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஷகிமா பானுவும், அப்துல் ஹலீமும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதை அந்த மாற்றுத்திறனாளி சிறுமி பார்த்துவிட்டாள். இதையடுத்து அந்த சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி அப்துல் ஹலீம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதற்கு ஷகிமா பானுவும் உடந்தையாக இருந்தார். அதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.
கைது
இந்த நிலையில் அங்கு வந்த தனது தாயிடம், பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதாள். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் இதுபற்றி மங்களூருவில் உள்ள மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந் தேதி ஷகிமா பானுவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அப்துல் ஹலீமை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்துல் ஹலீம் மும்பைக்கு ரெயிலில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசாரின் உதவியுடன், மங்களூரு மகளிர் போலீசார் கோவா மாநிலம் மடகோன் ரெயில் நிலையத்தில் வைத்து அப்துல் ஹலீமை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அப்துல் ஹலீம், ஷகிமா பானு ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.