பாலியல் பலாத்காரம்... இந்திய விமான படை உயரதிகாரி மீது பெண் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
|2021-ம் ஆண்டில், இதேபோன்று, தன்னுடைய உயரதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் குற்றச்சாட்டு கூறினார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் விமான படை நிலையத்தில் விங் கமாண்டர் தரத்திலான உயரதிகாரி ஒருவருக்கு எதிராக இந்திய விமான படையை சேர்ந்த பெண் உயரதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
அந்த உயரதிகாரிக்கு எதிராக, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசில் அளித்த புகாரின்பேரில் எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, புத்காம் காவல் நிலையத்தில் 376(2)-வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. அந்த புகாரில் பாலியல் பலாத்காரம், மனரீதியாக துன்புறுத்தல் அளித்தல் மற்றும் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்து துன்பமிழைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த பெண் உயரதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் உள்மட்ட அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி இந்திய விமான படை உத்தரவிட்டு உள்ளது. 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவில் புது வருட கொண்டாட்டம் நடந்தது. இதில், அந்த அதிகாரி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவருடைய அறையில் வைத்து பெண் உயரதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
2021-ம் ஆண்டில், இதேபோன்றதொரு சம்பவத்தில், தன்னுடைய உயரதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் குற்றச்சாட்டாக தெரிவித்து இருந்ததும், நீதி கோரி ஜம்மு மற்றும் காஷ்மீர் ஐகோர்ட்டிற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.