< Back
தேசிய செய்திகள்
பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்வதால் வாலிபருக்கு ஜாமீன்
தேசிய செய்திகள்

பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்வதால் வாலிபருக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
19 Jun 2024 4:23 AM IST

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டி வாலிபருக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஒரு சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். அப்போது அந்த சிறுமிக்கு 16 வயது நிரம்பி 9 மாதங்கள் ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு(2023) பிப்ரவரி மாதம் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்த தகவல் அவரது தாய்க்கு தெரியவந்தது.

உடனே இதுபற்றி அவர் மைசூரு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர் மீதான போக்சோ வழக்கு மைசூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த வாலிபர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தான் கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்காக தனக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

அந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரிடமும் நீதிபதி நாகபிரசன்னா விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,

'இங்கு ஒரு குழந்தையின் நலனையும், இளம் வயது தாயையும் பாதுகாக்க வேண்டி உள்ளது. அந்த இளம் தாய்க்கு திருமணம் நடந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த இளம் வயது தாய்க்கும் தற்போது 18 வயது நிறைவடைந்துள்ளது. திருமணம் தான் அந்த இளம் தாய்க்கும், அவரது குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கும். அந்த இளம் வயது தாயை, அவரை கற்பழித்த வாலிபருக்கே திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால் அவருக்கு 15 நாட்கள், அதாவது ஜூலை மாதம் 3-ந் தேதி வரை ஜாமீன் வழங்குகிறேன். ஜூலை 4-ந் தேதி அன்று விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும். அப்போது திருமணப்பதிவு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்