< Back
தேசிய செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
10 Dec 2022 3:36 AM IST

பாண்டவபுராவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

பாண்டவபுராவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய கோரி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

பாலியல் தொல்லை

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே பேபி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில், அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி முன்பு திரண்டனர்.

போராட்டம்

இந்த நிலையில் அவர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை தாக்கவும் முயற்சி செய்தனர். இதையடுத்து அவர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்வதுடன், அவரை பணி இடைநீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வட்டார கல்வித்துறை அதிகாரி சவுபாக்யா பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து பாண்டவபுரா போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்