< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால்கழுத்தை நெரித்து கொன்ற காவலாளி
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால்கழுத்தை நெரித்து கொன்ற காவலாளி

தினத்தந்தி
|
13 Aug 2023 12:15 AM IST

இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக, கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த காவலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பமாக, கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பக்கத்து வீட்டில் வசித்த காவலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல் நிலையம்

பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 21 வயது இளம்பெண் வசித்து வந்தார். கலபுரகியை சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். தனது சகோதரியுடன் அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு விடுமுறை என கூறப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் வீட்டில் இருந்த இளம்பெண், இரவில் வெளியே சென்றார்.

ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது சகோதரி அவரை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இளம்பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் மறுநாள் காலையில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உடலில் காயங்களுடன் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.

திடுக்கிடும் தகவல்கள்

அவரை மர்மநபர்கள் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, உடலை வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த காவலாளியான கிருஷ்ணா என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, இளம்பெண், தனது சகோதரியுடன் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்தபோது, கிருஷ்ணாவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணாவுக்கு திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், அவர் இளம்பெண்ணை தொடர்ந்து சந்தித்து காதல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இளம்பெண், வீட்டின் வெளியே நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணா, இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு இழுத்து சென்றார்.

பக்கத்து வீட்டுகாரர் கைது

மேலும் அவருக்கு அங்கு வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், கற்பழிக்க முயன்றுள்ளார். அப்போது இளம்பெண் கத்தி கூச்சலிடவே கிருஷ்ணா, இளம்பெண்ணின் வாய் மற்றும் மூக்கை கையால் மூடி உள்ளார். இருப்பினும் அவரது கற்பழிக்கும் முயற்சி கைகூடாததால் இளம்பெண்ணின் கழுத்தை கிருஷ்ணா நெரித்துள்ளார். இதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கிருஷ்ணா தனது வீட்டில் இளம்பெண்ணின் உடலை மறைத்து வைத்துள்ளார். பின்னர் மறுநாள் காலையில் யாருக்கும் தெரியாமல் அவர் இளம்பெண்ணின் உடலை சாலையில் வீசி உள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்