மூதாட்டி கற்பழித்து கொலை; வாலிபர் கைது
|அரிசிகெரேயில் மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன்:
அரிசிகெரேயில் மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்.
மூதாட்டி கற்பழித்து கொலை
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா மடலு கிராமத்தை சேர்ந்தவர் துர்காதேவி (வயது 85). இந்த நிலையில் இவர் கடந்த 1-ந் தேதி தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது யரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த மிதுன்குமார் (32) என்பவர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது மிதுன்குமார், மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் அவர் மூதாட்டியை வீட்டுக்கு அழைத்து செல்லாமல், மறைவான பகுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் மூதாட்டியை கழுத்தை நெரித்து அவர் கொலை செய்ததாகவும் தெரிகிறது. பின்னர் அங்கிருந்து மிதுன்குமார் தப்பி சென்றுவிட்டார்.
தனிப்படை அமைப்பு
இதற்கிடையே மூதாட்டி துர்காதேவி மாயமானதாக அவரது உறவினர்கள் அரிசிகெரே போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த கிராமத்தையொட்டி உள்ள பகுதியில் மூதாட்டி அலங்கோல நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அவரை யாரோ மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபரை தீவிரமாக தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் மூதாட்டியை கற்பழித்து கொலை செய்ததாக மிதுன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை வருகிறார்கள்.