2 பெண்கள் பலாத்காரம்;ஓட்டல் ஊழியருக்கு 4 ஆண்டு சிறை; உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
|மைனர் பெண் மற்றும் அவரது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மங்களூரு;
மைனர் பெண் பலாத்காரம்
உடுப்பி டவுன் கோட்டா பகுதியை சேர்ந்தவர் கிஷன். இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதேபோல் அந்த பகுதியில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மைனர் பெண் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மைனர் பெண் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிஷன், மைனர் பெண்ணை வழிமறித்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றுபலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
சகோதரிக்கு பாலியல் தொல்லை
இதையடுத்து சில நாட்கள் கழித்து மைனர் பெண்ணின், சகோதரியையும் கிஷன் வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அவரையும் பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்து நடந்த சம்பவங்களை மைனர் பெண்ணும், அவரது சகோதரியும் தங்களது பெற்றோரிடம் கூறினா்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து கோட்டா போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கிஷனை கைது செய்தனர். மேலும் அவரை ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
4 ஆண்டு சிறை
இந்த வழக்கின் விசாரணை உடுப்பி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் கோட்டா போலீசார், அந்த வழக்கு குறித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சீனிவாச சுவர்ணா தீர்ப்பு வழங்கினார்.
அதில் கிஷன் மீது குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் உடுப்பி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.