< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக பரபரப்பு
தேசிய செய்திகள்

பெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக பரபரப்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 3:11 AM IST

பெங்களூருவில் நடந்த மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தள்ளது. இதற்கு முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு:

சுர்ஜேவாலா தலைமையில் கூட்டம்

கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்து வருபவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா. இவர், பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். பெங்களூரு நகரின் வளர்ச்சி, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் மற்றும் பெங்களூரு மாநகராட்சியை பெருநகர மாநகராட்சியாக மாற்றுவது குறித்து பெங்களூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கும் டி.கே.சிவக்குமார் தலைமையில், பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து இருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், மாநகராட்சி நிர்வாக அதிாரி ராகேஷ் சிங் ஆகியோரும் பங்கேற்று இருந்தார்கள். ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தலைமையில் நடந்ததாகவும், அவேர பெங்களூரு வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அதாவது சுர்ஜவாலாவுக்கு அருகே தான் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அமர்ந்திருப்பது போன்று அந்த புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இருப்பதாக பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களும் குற்றச்சாட்டு கூறினார்கள்.

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அதிகாரத்தை ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு அளித்தது யார்? என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கேள்வி எழுப்பி இருந்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் 85 சதவீத கமிஷன் குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசித்திருப்பதாக பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கூறி இருந்தது.

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரப்பூர்வ கூட்டம் இல்லை

பெங்களூரு மாநகராட்சி தேர்தல், பெங்களூரு வளர்ச்சி குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றிருந்தது. அந்த கூட்டத்தில் தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்று இருக்கிறார். இது சுர்ஜேவாலாவால் கூட்டப்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை. இது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடந்த கூட்டமாகும். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு அதிகாரம் இருக்கிறதா?.

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசி இருக்கிறார். சட்ட நிபுணர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். ஹெப்பால் அருகே உள்ள மேம்பாலத்தை பார்க்க ரன்தீப்சிங் சுர்ஜேவாலா செல்ல இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஓட்டலில் இருந்ததால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சென்றிருந்தார். இந்த விவகாரம் குறித்து கவர்னரிடம் புகார் அளிக்க போவதாக பா.ஜனதாவினர் கூறியுள்ளனர். பா.ஜனதாவினர் புகார் அளிக்கட்டும். அது அவர்களது முடிவு.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்