பட்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற ராமநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே நேரடி போட்டி
|கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகரில் வெற்றிபெறப்போவது யார் என்பது பற்றி இங்கு காண்போம்.
பெங்களூரு:
பட்டு உற்பத்திக்கு பெயர் பெற்ற ராமநகர் மாவட்டம் கெங்கல் அனுமந்தய்யா, எச்.டி.தேவேகவுடா, குமாரசாமி உள்ளிட்ட 3 முதல்-மந்திரிகளை தந்து உள்ளது. இங்குள்ள 4 தொகுதிகளில் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) 3 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளன.
இந்த மாவட்டத்தில் கடந்த தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் தற்போது முதல்-மந்திரி பந்தயத்தில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு இது சொந்த மாவட்டம் ஆகும். எனவே இந்தமுறை கூடுதல் இடங்களை கைப்பற்ற காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
ராமநகர்
ராமநகர் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் சென்னபட்டணா தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதால், ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த முறை அவரும் போட்டியிடவில்லை என்று தெரிவித்து விட்டார். இதனால் ராமநகர் தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த இக்பால் உசேன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதாவுக்கு அங்கு போதிய செல்வாக்கு இல்லாததால், பலமான வேட்பாளரை தேடி வருகிறார்கள்.
மாகடி-கனகபுரா
மாகடி தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் மஞ்சுநாத். தற்போதும் அவருக்கே அக்கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த எச்.சி.பாலகிருஷ்ணாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இல்லாத பா.ஜனதா வலுவான வேட்பாளரை நிறுத்த முயன்று வருவதாக தெரிகிறது.
கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், டி.கே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும், இவர் முதல்-மந்திரி பந்தயத்திலும் உள்ளார். இந்த முறையும் கனகபுரா தொகுதியில் டி.கே.சிவக்குமாரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
சென்னபட்டணா
சென்னப்பட்டணா தொகுதியில் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி. இவர் ராமநகரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை, குமாரசாமி சென்னப்பட்டணா தொகுதியில் களம் இறங்குகிறார். ஆனால் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பா.ஜனதா இங்கு பலமான வேட்பாளரை தேடி வருகிறது.
ராமநகர் மாவட்டத்தை பொறுத்தவரை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி தான் பலமாக உள்ளது. பா.ஜனதாவுக்கு போதிய பலம் கிடையாது. இதனால், ராமநகர் மாவட்டத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.