ராமர் கோவில் கும்பாபிஷேக விழா - அயோத்தியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
|யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி, அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம், நீர் மற்றும் வான் வழி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன்கள் ஆகியற்றைக் கொண்டு உத்தர பிரதேச போலீசார் அயோத்தி நகரை முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர். சரயு நதிக்கரையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி, அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100 டி.எஸ்.பி.க்கள், சுமார் 325 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 800 சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 11,000 பேர் உள்ளிட்டோர் அயோத்தியில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக 3 டி.ஐ.ஜி.க்கள், 17 எஸ்.பி.க்கள், 40 ஏ.எஸ்.பி.க்கள், 82 டி.எஸ்.பி.க்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 1,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பார்-கோட் முறை பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.