ராமர் கோவில் கும்பாபிஷேக விழா புறக்கணிப்பு: காங்கிரஸ் மேலிடத்தின் நிலைப்பாட்டிற்கு சித்தராமையா ஆதரவு
|அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
பெங்களூரு,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் நிகழ்ச்சி எனக்கூறி விழாவை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆதரித்துள்ளார். ஒரு மத நிகழ்வை அரசியல் விவகாரமாக பாஜக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்காத அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கூறியது சரிதான். அவர்களின் முடிவை நான் ஆதரிக்கிறேன்.
ஜாதி, மதம் பாராமல் அனைவரும் பக்தியுடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டிய மத நிகழ்ச்சியை அரசியலாக்குகின்றனர். ராமஜென்மபூமி சர்ச்சை தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
10 ஆண்டுகால ஆட்சியை முடிக்கவுள்ள பிரதமருக்கு, தனது சாதனைகளை வாக்காளர்களிடம் காட்டி தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை. இதற்காகவே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அவசர அவசரமாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்துகின்றனர்.
காங்கிரஸ் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல. தீண்டாமை, சாதிவெறி, மதவெறி மற்றும் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு முற்றிலும் எதிரானது. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்துகின்றனர்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.