'ராமர் கோவில் திறப்பு விழா... வித்தை காட்டுகிறது பா.ஜ.க.' - மம்தா பானர்ஜி விமர்சனம்
|மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க. வித்தை காட்டி வருவதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் கூறியதாவது;-
"ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைத்து சமூகத்தினரையும் இணைக்கக் கூடிய பண்டிகைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு உத்தரவின்பேரில் ராமர் கோவில் திறப்பு விழாவை பா.ஜ.க. நடத்துகிறது. ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை வைத்து பா.ஜ.க. வித்தை காட்டி வருகிறது. மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை."
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.