ராமர் கோவில் திறப்பு விழா; எங்களுக்கு அழைப்பு வரவில்லை - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார்
|விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி முடிவு செய்யும் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எனக்கோ, எங்கள் முதல்-மந்திரிக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விழாவில் கலந்து கொள்வது குறித்து கட்சி முடிவு செய்யும்.
நான் ஒரு இந்து, நான் ஒரு ராம பக்தன், நான் ஒரு அனுமான் பக்தன். நாங்கள் இங்கிருந்தே பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் பக்தியை எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை."
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.