மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி
|தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
மணிப்பூர்,
ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை'யின் இரண்டாம் அத்தியாயத்தை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' என்ற பெயரில் நடத்தி வருகிறார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இன்று நாகலாந்தில் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டார்.
நாகலாந்து தலைநகர் கொஹிமாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், "ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் இணைந்து ஜனவரி 22 நிகழ்வை முற்றிலும் மோடி நிகழ்வாக, அரசியல் நிகழ்வாக, ஆர்எஸ்எஸ் நிகழ்வாக மாற்றியுள்ளன. இது ஆர்எஸ்எஸ் - பாஜக நிகழ்வாகக் கொண்டாடப்படுவதால்தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விழாவை புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
நாங்கள் அனைத்து மதங்களையும் திறந்த மனத்தோடு அணுகுகிறோம். எல்லா மத நடைமுறைகளையும் மதிக்கிறோம். ஆனால், ஜனவரி 22 நிகழ்வு குறித்து இந்து மதத்தின் பெரிய தலைவர்கள் கூட, அதனை அரசியல் நிகழ்வு என்று விமர்சித்துள்ளனர். ஆகையால், இந்தியப் பிரதமரை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் அரசியல் நிகழ்வில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் விழாவாக அடையாளப்படுத்தப்படும் ஒரு நிகழ்வில் எங்களால் கலந்து கொள்ள முடியாது" என்றார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் நடத்தப்படும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சி அறிவித்தது.