< Back
தேசிய செய்திகள்
ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு - காங்கிரஸ் விமர்சனம்
தேசிய செய்திகள்

'ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு' - காங்கிரஸ் விமர்சனம்

தினத்தந்தி
|
12 Jan 2024 4:55 PM IST

தேர்தலை மனதில் வைத்து ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பவன் கேரா விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா ஒரு மத நிகழ்வு அல்ல என்றும், அது ஒரு அரசியல் நிகழ்வு என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. ஒரு இடைத்தரகர் போல் செயல்படுகிறது. எனக்கும் எனது கடவுளுக்கும் இடையே இடைத்தரகர் தேவையில்லை. சங்கராச்சாரியார் உள்ளிட்ட மத தலைவர்கள் ராம நவமி அன்றுதான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் 22-ந்தேதி விழாவை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?

இவர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? அல்லது இந்து தர்மத்திற்கு மேலானவர்களா? தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தேதியின் முக்கியத்துவம் என்ன? எந்த பஞ்சாங்கத்தை வைத்து இதை முடிவு செய்தார்கள்? தேர்தலை மனதில் வைத்து இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மத நிகழ்வு அல்ல, முற்றிலும் அரசியல் சார்ந்த நிகழ்வு."

இவ்வாறு பவன் கேரா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்