< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 22-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் எவை எவை?
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: 22-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் எவை எவை?

தினத்தந்தி
|
19 Jan 2024 6:21 PM IST

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்டமான முறையில், கலை நுட்பத்துடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை வருகிற 22-ந்தேதி நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவை, உலகமே வியக்கும் வண்ணம் நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடு களை செய்துவருகிறது. அயோத்தியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களும் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பல மாநில அரசுகளும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறையை அறிவித்துள்ளன.

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் ஜனவரி 22-ந் தேதி பிற்பகல் 2.30 மணிவரை மூடப்படும். அதாவது அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி: உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் அனைத்தும் அன்றைய தினம் மூடப்படும்.

ம.பி: மத்திய பிரதேச மாநிலத்திலும் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகளும் அன்றைய தினம் மூடப்படும்.

கோவா: கோவா மாநிலத்தில் ஜனவரி 22-ந் தேதி முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும்

அரியானா: அரியானாவிலும் கல்வி நிறுவனங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவை எதுவும் ஜனவரி 22-ந் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா: பாஜக அல்லாத பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிசா மாநில அரசும் ஜனவரி 22-ந் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் மாஜிஸ்திரே, வருவாய் நீதிமன்றங்கள் அரை நாள் மட்டும் இயங்கும்.

அசாம், அரியானா: அசாம் மாநில அரசும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அனைது அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஜனவரி 22-ந் தேதியன்று பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும்.

புதுச்சேரியில் வரும் 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில அரசும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்