ராமர் கோவில் விஷயத்தில் நாடு ஆர்வம்.. கவலை அளிக்கிறது: சாம் பிட்ரோடா பரபரப்பு பேட்டி
|பணவீக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மாசுபாடு போன்ற தேசிய பிரச்சினைகள் பற்றி யாரும் பேசுவதில்லை என சாம் பிட்ரோடா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது கவலை அளிக்கிறது. ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்வதை நான் கண்கூடாக பார்க்கிறேன். பிரதமரால் நாட்டில் நல்லது நடக்கும் என்று எல்லோரும் நினைப்பது கவலை அளிப்பதாக உள்ளது. நாம் தவறான திசையில் பயணிக்கிறோம் என்பதற்கான தகவல்கள் கிடைக்கின்றன.
ராமர் கோவில் மற்றும் ராம ஜென்மபூமி, தீபம் ஏற்றுதல் போன்ற விஷயங்களில் ஒட்டுமொத்த நாடும் அதீத ஆர்வம் காட்டும்போது, அது எனக்கு கவலையை ஏற்படுத்துகிறது.
என்னைப் பொருத்தவரை, மதம் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். தேசிய பிரச்சினைகள் என்பது கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி, பொருளாதாரம், பணவீக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மாசுபாடு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில், கோவில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சாம் பிட்ரோடாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.