'ராமர் எங்கள் குடும்ப கடவுள்; நான் ராம பக்தன்' - கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன்
|மக்களை பிரிக்க கடவுளையும், மதத்தையும் காங்கிரஸ் என்றைக்கும் பயன்படுத்தியதில்லை என இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. இக்பால் ஹுசைன் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதையாவது செய்கிறார்கள். ஆனால் மக்களை பிரிக்க கடவுளையும், மதத்தையும் காங்கிரஸ் என்றைக்கும் பயன்படுத்தியதில்லை. காங்கிரஸ் கட்சிக்கென ஒரு சித்தாந்தமும், அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் உள்ளது. அதை நான் பின்பற்றுகிறேன்.
ராமர் உள்பட அனைத்து கடவுள்களையும் நாங்கள் வணங்குகிறோம். அவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அல்ல. ராமர் எங்கள் குடும்ப கடவுள். ராமரை அவர்கள் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அப்படி செய்யவில்லை.
நான் சிறுவயதில் இருந்தே சரஸ்வதி தேவி, லட்சுமி தேவி, விநாயகர் மற்றும் ராமரை வணங்கி வருகிறேன். நான் ராம பக்தன். நான் எல்லா கடவுள்களையும் வணங்குகிறேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை."
இவ்வாறு இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.