நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு
|நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
காத்மாண்டு,
நேபாள அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வருகிற 12-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அங்கு புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.
இதில் நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் (வயது 78), புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் ராம் சந்திர பவுடலை ஆதரித்தன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுபாஸ் சந்திர நெபாங்கை, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது.
புதிய அதிபர் ராம் சந்திர பவுடலுக்கு, பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
நேபாளத்தில் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அதிபர் தேர்தல் நடந்திருக்கிறது. இது அரசில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.