< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதம்
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதம்

தினத்தந்தி
|
18 Sept 2023 10:52 PM IST

அமளியில் ஈடுபடுவதை நியாயப்படுத்துவதா என்று எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுடன் மாநிலங்களவை தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

நாடாளுமன்ற மாநிலங்களவையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதம் நடந்தது. அதில், எதிர்க்கட்சி தலைவர் கார்கே பங்கேற்று பேசியதாவது:-

உலகம் மாறிவிட்டது. ஆனால், மக்களவையில் பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 14 சதவீதமாகவும், மாநிலங்களவையில் அவர்கள் எண்ணிக்கை 10 சதவீதமாகவும் உள்ளது. நேரு பிரதமராக இருந்தபோது, 5 சதவீத பெண் எம்.பி.க்கள் இருந்தனர். 70 ஆண்டுகளுக்கு பிறகும், இன்னும் 10 முதல் 15 சதவீத அளவிலேயே பெண் எம்.பி.க்கள் இருக்கின்றனர். எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

பெயரை மாற்ற வேண்டாம்

ஆனால், மத்திய அரசோ அவசரகதியில் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. ஒருசில மசோதாக்கள் மட்டுமே நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெயரை மாற்றுவது அவசியம் இல்லை. தற்போதைய நிலவரத்தை மாற்றுவதே அவசியம். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மாறுவதால் என்ன மாற்றம் வரப்போகிறது? அர்த்தமுள்ள மாற்றம் வேண்டுமென்றால், தற்போதைய நிலவரத்தை மாற்றுங்கள். விலைவாசி உயர்வையும், வேலையின்மையையும் கட்டுப்படுத்தாவிட்டால், அவை ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்.

பா.ஜனதா வழியை பின்பற்றுகிறோம்

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மறைந்த பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது காட்டிய வழியைத்தான் காங்கிரஸ் பின்பற்றுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மாநிலங்களவையில் அருண் ஜெட்லி பேசுகையில், ''நாடாளுமன்றத்தின் வேலை விவாதிப்பதுதான். பிரச்சினைகள் புறக்கணிக்கப்படும்போது, சபையை முடக்குவது மக்கள் நலனுக்காகத்தான். எனவே, நாடாளுமன்ற முடக்கத்தை ஜனநாயக விரோதமாக கருத முடியாது'' என்று கூறினார்.

மக்களவையில் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ''நாடாளுமன்றம் நடைபெறாமல் தடுப்பதும் ஜனநாயகத்தின் ஒருவகைதான்'' என்று கூறினார். இதையே நாங்கள் செய்யும்போது எங்களை விமர்சிக்கிறார்கள்.

இவ்வாறு கார்கே கூறியபோது, சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் குறுக்கிட்டார்.

நியாயப்படுத்துவதா?

''நன்றாக யோசித்து சொல்லுங்கள். கடந்த காலத்தை சுட்டிக்காட்டியே அமளியை எத்தனை காலத்துக்கு நியாயப்படுத்த போகிறீர்கள்?'' என்று ஜெகதீப் தன்கர் கேட்டார்.

அதற்கு கார்கே, சபைத்தலைவர் தன்னை பேச அனுமதிப்பது இல்லை என்று கூறினார். சபைத்தலைவர் குறுக்கிட்டு, ''விவாதம் நடக்கும்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் இங்கு இருப்பது இல்லை. வெளிநடப்பு செய்து விடுகிறார்கள்'' என்று குற்றம் சாட்டினார். அதையடுத்து, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், கார்கேவை முழுமையாக பேச அனுமதிக்குமாறு கூறினர்.

சூப்பர் எதிர்க்கட்சி தலைவரா?

அதற்கு ஜெய்ராம் ரமேஷை சபைத்தலைவர் கண்டித்தார். ''நீங்கள் என்ன சூப்பர் எதிர்க்கட்சி தலைவரா? அவருக்கு உதவி தேவையில்லை'' என்று அவர் கூறினார்.

அந்த கருத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சபைத்தலைவர், காங்கிரஸ் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துமாறு கார்கேவை கேட்டுக்கொண்டார். எல்லா கட்சிகள் மீதும் அவதூறு சொல்லாதீர்கள் என்று சபைத்தலைவரை மற்றொரு எம்.பி. வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்