20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ராஜீவ் காந்தி சிலை
|ஆண்டர்சன்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலையை திறக்க கோரி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:-
ராஜீவ் காந்தி சிலை
கோலார் தங்கவயலை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்ட போது உடனே திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது முடியவில்லை. ஏனென்றால் மாநிலத்தில் அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. எம்.எல்.ஏ. கூட காங்கிரஸ் பிரமுகர் இல்லை.
இதனால் சிலை திறப்பு விஷயத்தில் காங்கிரசின் செல்வாக்கு எடுபடவில்லை. இதையடுத்து பல ஆண்டுகள் முயற்சி செய்து, ராஜீவ் காந்தியின் முழு உருவ சிலையை திறக்க முடியாமல் போனது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து, ராஜீவ் காந்தி சிலையை திறக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
எம்.எல்.ஏ. ஆர்வம் காட்டவில்லை
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ.ரூபாகலா சசிதர் நடவடிக்கை எடுப்பார் என்று அந்த கட்சியினர் எதிர்பார்த்தனர். மேலும் இதுகுறித்து ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை கேட்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆனால் செய்யவில்லை. பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முடிக்க ஆர்வம் காட்டிய அவர், இந்த சிலையை திறப்பதற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அந்த சிலையின் அடிப்பகுதியில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
சிலையை திறக்க கோரிக்கை
இதே நிலை நீடித்தால் விரைவில் அந்த சிலை கீேழ விழுந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும், மூடிவைக்கப்பட்ட ராஜீவ் காந்தி சிலையை திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் ராஜீவ் காந்தி சிலையை திறக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த ஆட்சி காலத்தை விட்டுவிட்டால், இனி ராஜீவ் காந்தி சிலையை திறக்க முடியாது என்று காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். இதனால் ராஜீவ் காந்தி சிலை திறக்கப்படுமா? இ்ல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.