< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

தினத்தந்தி
|
21 March 2024 1:33 PM IST

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் விஸ்வகர்மா பகுதியில் உள்ள ஜெய்சால்யா கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் தம்பதி மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் வசித்து வந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது இரவு நேரம் என்பதால் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், தீ வீடு முழுவதும் பரவியது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஒரு அறைக்கு சென்றனர். இருப்பினும் தீ அவர்கள் இருந்த அறைக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து அங்கு வசிக்கும் சிலர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், குடும்பத்தினர் 5 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் இவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் வீட்டின் கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவத்துக்கு அம்மாநில முதல்-மந்திரி பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜெய்ப்பூர், விஸ்வகர்மாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களது உறவினர்களுக்கு வலிமை அளிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்"என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்