ராஜஸ்தானில் நிலத்தகராறில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
|ராஜஸ்தானில், நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட காங்கிரஸ் தலைவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில், நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட காங்கிரஸ் தலைவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு பரன் மாவட்ட தலைநகர் பரன் நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கவுரவ் சர்மா. அவருக்கு பரன் நகரில் தாளவாடா சாலையில் சொந்த நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக அவருக்கும், ராஜேந்திரா, ராம்குமார் என்பவர்களுக்கும் இடையே தகராறு நிலவி வந்தது.
கவுரவ் சர்மா, சர்ச்சையில் சிக்கி உள்ள அந்த நிலத்தில் வீடு கட்டி வந்தார். கடந்த 7-ந் தேதி, வீடு கட்டுவதை பார்க்க சென்றார். அப்போது, ராஜேந்திரா, ராம்குமார் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களுக்கும், கவுரவ் சர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினை முற்றிய நிலையில், ராஜேந்திரா, ராம்குமார் ஆகிய இருவரும் கவுரவ் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். சர்மாவுக்கு தலையில் குண்டு பாய்ந்தது.
முதலில், பரன் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கவுரவ் சர்மா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மோசம் அடைந்ததால், கோடா நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அவரது தலையில் பாய்ந்திருந்த குண்டை டாக்டர்கள் அகற்றினர். இருப்பினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
கவுரவ் சர்மா, உயிருக்கு போராடி வந்தார். இறுதியாக, நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.