காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமை.. ராஜஸ்தானில் வெற்றி நிச்சயம்: ராகுல் நம்பிக்கை
|காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் வந்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு புதிய வாக்குறுதிகளை வழங்கி பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் வந்தார். விமானம் மூலம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவர், அங்கிருந்து சுரு மாவட்டம், தாரா நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தலைவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் கூறினார்.
ராகுல் காந்தியுடன் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் உடனிருந்தனர்.
தாரா நகர் பிரசார கூட்டத்தைத் தொடர்ந்து, ஹனுமன்கர் மாவட்டம் நோகர், ஸ்ரீகங்காநகர் மாவட்டம் சாதுல்ஷாகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.