< Back
தேசிய செய்திகள்
ராஜாஜிநகர் 6-வது பிளாக் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?
தேசிய செய்திகள்

ராஜாஜிநகர் 6-வது பிளாக் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
13 Nov 2022 3:16 AM IST

வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக சாலையில் காத்து நிற்கும் நிலையில் ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:

வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக சாலையில் காத்து நிற்கும் நிலையில் ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நிழற்குடை

தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் உள்ளிட்ட புனைபெயர்களால் பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு நகரில் தொழில்கள் கொட்டி கிடப்பதால் பிற மாநிலங்களில் இருந்து வேலை தேடி பெங்களூருவுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ரெயில், பஸ்கள் மூலம் வருபவர்கள் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்கு பஸ்களில் செல்கின்றனர்.

ஆனால் பெங்களூருவில் குறிப்பிட்ட சில இடங்களில் பயணிகளுக்காக பஸ் நிலைய நிழற்குடை இல்லை என்று சொல்லப்படுகிறது. நகரின் இதய பகுதி என்று அழைக்கப்படும் மெஜஸ்டிக்கின் மிக அருகில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் கூட பஸ் நிலைய நிழற்குடை இல்லை என்பது தான் வேதனையான விஷயம். தொழிற்பேட்டைகளால் நிரம்பி வழியும் ராஜாஜிநகர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும்.

ஒதுங்க இடம் இல்லை

ராஜாஜிநகர் 6-வது பிளாக் பஸ் நிலைய நிழற்குடை இல்லை. பல ஆண்டுகளாக அப்பகுதியில் இருந்து பஸ்களில் ஏற பயணிகள் சாலையில் தான் நிற்கின்றனர். வெயில், மழையிலும் கூட பயணிகள் சாலையில் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் நிழற்குடை இல்லாத காரணத்தால் பயணிகள் மழையில் நிற்பதை காண முடிகிறது. இதுகுறித்து பயணிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

காமாட்சிபாளையா பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் கூறுகையில், "நான் வேலை விஷயமாக வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் ராஜாஜிநகருக்கு வந்து செல்கிறேன். ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. எதிர்திசையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கிறது. நிழற்குடை இல்லாத பகுதியில் பயணிகள் பஸ்சுக்காக சாலையில் காத்து நிற்கின்றனர். வெயில், மழையிலும் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லை. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அங்கு நிழற்குடை அமைத்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

கஷ்டம் தான்

சுங்கதகட்டேயில் வசித்து வரும் மூவேந்தர் என்பவர் கூறும்போது, "பெங்களூரு நகரில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் கால் கடுக்க சாலையில் தான் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். ராஜாஜிநகர் 6-வது பிளாக் பகுதியில் தொழிற்பேட்டைகள், கல்லூரிகள் உள்ளன. வேலைக்கு, படிக்க வரும் மாணவர்கள் பஸ் நிறுத்தத்தில் சாலையில் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் ஒதுங்குவதற்கு இடம் இல்லை. அருகே உள்ள கட்டிடங்களில் தான் ஒதுங்கி இருக்க வேண்டி உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்" என்றார்.

கல்லூரி மாணவியான வர்ஷா கூறுகையில், "எனது வீடு விஜயநகரில் உள்ளது. ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறேன். 6-வது பிளாக் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. தினமும் காலையில் தான் பஸ்சுக்காக காத்து நிற்கிறேன். மழை பெய்தால் பஸ் நிறுத்தத்திற்கு வருபவர்கள் நிலை கஷ்டம் தான். பயணிகள் மழைக்கு ஒதுங்கி நிற்கும் வகையில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்