கடைக்கு முன் பேனர் வைப்பதில் சண்டை; வயதான பெண்ணை சாலையில் தள்ளி அடித்து உதைத்த ராஜ் தாக்கரே கட்சியினர் 3 பேருக்கு ஜாமீன்!
|மும்பையில் ஒரு வயதான பெண்ணை அடித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் ஒரு வயதான பெண்ணை அடித்து தாக்கிய புகாரில், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியை சேர்ந்த 3 தொண்டர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 28 அன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் வயதான பெண்ணை, ஒருவர் தள்ளுவது மற்றும் அடிப்பது காணப்பட்டது. மும்பையின் காமாதிபுரா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
மும்பையின் காமாதிபுரா பகுதியில் கடை நடத்தி வரும் ஒரு வயதான பெண்மணியின் கடைக்கு முன்பு, சிலர் பேனரை நிறுவ விரும்பி மூங்கில் கம்புகளை அமைக்க கொண்டு வந்துள்ளனர். இதனை அந்த பெண் எதிர்த்துள்ளார். வேறு இடத்தில் அவற்றை அமைக்குமாறு அவரக்ளிடம் கூறினார்.
இந்நிலையில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது.ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் திட்ட தொடங்கினர். அங்கு பெருங்கூட்டம் சேர்ந்தது.
ஒரு கட்டத்தில், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள், நீங்கள் விரும்பியவர்களை அழைத்து வாருங்கள் என்று கூறிய அந்த நபர், அந்த பெண்ணை கீழே தள்ளி உதைத்து தாக்க தொடங்கினார்.
அந்த பெண் அழுதுகொண்டே எழ முயற்சிக்க அவர் தள்ளி விட, அப்பகுதி பதற்றம் அதிகரித்தது. மற்றொரு நபர் அந்த இடத்திற்கு வந்து அந்த பெண்ணை விரட்ட தொடங்கினார். இந்த மோதலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
இச்சம்பவம் வீடியோவாக பரவியதை தொடர்ந்து, வயதான பெண்ணை அடித்து தாக்கிய புகாரில், 3 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் எனத் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் ஷிவ்டி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரூ.15,000 பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பிரகாஷ் தேவி கூறுகையில், "அவர்கள் எனது கடைக்கு வெளியே பேனரை நிறுவ விரும்பினர், நான் மறுத்துவிட்டேன். உடனே என்னை அறைந்து தாக்கினர். இதை வேறு இடத்தில் நிறுவச் சொன்னேன், அதனால் அவர்கள் என்னை அடித்தார்கள்... எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது" என்று தெரிவித்தார்.