< Back
தேசிய செய்திகள்
ராமநகரில் தொடர் கனமழை-மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம்; பொதுமக்கள் பீதி
தேசிய செய்திகள்

ராமநகரில் தொடர் கனமழை-மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம்; பொதுமக்கள் பீதி

தினத்தந்தி
|
31 Aug 2022 2:19 AM IST

ராமநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

ராமநகர்:

ராமநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் ஒரு ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

ஏரி உடையும் அபாயம்

ராமநகர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே பசகி, சேத்ரஹள்ளி, ஒங்கனூர், திட்டமாரனஹள்ளி உள்பட 5 ஏரிகள் உடைந்தன. இதனால் ராமநகர், சன்னப்பட்டணா ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேவரகவுடனதொட்டி கிராமத்தில் உள்ள கே.ஜி.ஒசஹள்ளி என்ற ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதனால் அந்த ஏரியும் உடையும் அபாயத்தில் உள்ளது. அந்த ஏரி உடைந்தால் தேவரகவுடனதொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும். இதனால் அந்த கிராம மக்கள் பீதியில் உள்ளார்கள். ராமநகர் டவுனில் பக்சிகெரே என்ற ஏரி உடைந்து போனதால் திப்புநகர், கவுசியா நகர், அர்க்கேஸ்வரா நகரில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அந்த வீட்டில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

போலீஸ் நிலையத்திற்குள் தண்ணீர்

ராமநகர் அருகே சங்கபசப்பனதொட்டி என்ற கிராமத்தில் சுரங்கபாதை தண்ணீரில் மூழ்கியது. அந்த வழியாக சென்ற முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வரின் கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதுபோல கன்மினிக்கி என்ற கிராமத்தில் இணைப்பு சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்ற ஒரு மினி பஸ்சும் வெள்ளத்தில் சிக்கியது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டன. தொடர் கனமழை காரணமாக ராமநகரில் ஓடும் அர்க்காவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

இதுபோல மண்டியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நாகமங்களா டவுனில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி.பஸ் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 22 அரசு பஸ்கள் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியுள்ளன. அந்த பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சாம்ராஜ்நகரில் பெய்து வரும் கனமழையால் எலந்தூர் தாலுகாவில் உள்ள அகரா கிராமம் வெள்ளத்தில் மிதக்கிறது.

அகரா-மாம்பள்ளி போலீஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த போலீஸ் நிலையத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தன. துமகூரு ரங்காபுரா பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏராளமான பண்ணை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் அரகெரே-திப்பனஹள்ளி கிராமங்களை இணைக்கும் பாலமும் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்