பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தண்ணீர் தேங்கியது
|ராமநகரில் பெய்த பலத்த மழையால் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
ராமநகர்:
ராமநகரில் பெய்த பலத்த மழையால் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
மழைநீர் தேங்கியது
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விரைவுச்சாலையில் போக்குவரத்து தொடங்கிய பிறகும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ராமநகரில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டியது. இந்த கனமழையால், ராமநகர் அருகே பசவன்புரா பகுதியில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் தண்ணீர் ேதங்கியது. குளம்போல தேங்கி கிடந்த தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
விபத்து
சாலையே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்ததால், அந்தப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது, இரு லாரிகள் மோதி விபத்தும் நடந்தது. அதாவது, சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் லாரி மெதுவாக சென்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த மினிலாரி ஒன்று லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் ஆதங்கம்
விரைவுச்சாலைக்கு அதிக சுங்க கட்டணம் வசூலிக்கும் நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் தேங்காமல் இருக்க முறையாக மேலாண்மை செய்யவில்லை என வாகன ஓட்டிகள் ஆவேசம் அடைந்தனர். மேலும் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தாலும் அவர்கள் அங்கு வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஆதங்கம் அடைந்தனர்.