டெல்லி: மழையால் சற்று குறைந்த காற்றுமாசு...!
|டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக காற்று மாசு கணிசமாக குறைந்தது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றுமாசுபாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதேவேளை, தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. மேலும், பல பகுதிகள் காற்று மாசுபாடு அதிகரித்து புகைமூட்டமாக காணப்படுகின்றன. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை காரணமாக புகைமூட்டம் குறைந்து காற்றின் தரம் சற்று உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று பெய்த மழை காரணமாக காற்றின் தரம் இன்று சற்று உயர்ந்துள்ளது. மிகமோசம் என்ற நிலையில் இருந்து காற்றின் தரம் மோசம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது.
ஆனாலும், டெல்லியின் ஆனந்த் விகார், ஆர்கே புரம் மற்றும் பஞ்சாபி பாக் ஆகிய பகுதிகளில் இன்று காற்று மாசுபாட்டின் தரம் முறையே 282,220, 236 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது காற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை குறிக்கிறது. கடந்த சில நாட்களை விட காற்றின் தரம் சற்று அதிகரித்துள்ளபோதும் இன்னும் 'மோசமான' நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக, டெல்லியில் காற்றுமாசுபாட்டை குறைக்க செயற்கை மழையை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையலாம் என்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். தீபாவளியன்று டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் அண்டை மாநிலங்களில் பட்டாசுவெடிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் காற்றுமாசுபாடு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.