< Back
தேசிய செய்திகள்
ரெயில்வே பணி நியமன ஊழல்; சி.பி.ஐ. முன் தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜர்?
தேசிய செய்திகள்

ரெயில்வே பணி நியமன ஊழல்; சி.பி.ஐ. முன் தேஜஸ்வி யாதவ் இன்று ஆஜர்?

தினத்தந்தி
|
25 March 2023 10:35 AM IST

ரெயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய நிலையில், அவர் இன்று நேரில் ஆஜராவார் என கூறப்படுகிறது.



புதுடெல்லி,



ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வேயில் வேலை அளிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பீகாரின் பாட்னாவை சேர்ந்த பலர், பல்வேறு ரெயில்வே கோட்டங்களில் குரூப் டி பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக, அவர்களது நிலங்கள், லாலு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏ.கே. இன்போசிஸ்டம் என்ற நிறுவனத்தின் பெயர்களில் மாற்றப்பட்டன. பின்னர் அந்த நிறுவனத்தை லாலு குடும்ப உறுப்பினர்கள் கையகப்படுத்தினர்.

இதன்படி, பாட்னாவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 292 சதுர அடி நிலங்கள், 5 கிரய பத்திரம், 2 தான பத்திரங்கள் மூலம் லாலு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மாற்றப்பட்டன. அதற்கான பணம், ரொக்கமாக தரப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நிலங்களின் அப்போதைய வழிகாட்டி மதிப்பு ரூ.4 கோடியே 39 லட்சம். ஆனால், சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.

ரெயில்வேயின் பணி நியமன விதிமுறைகள் பின்பற்றப்படாததுடன், அந்த நபர்கள் நிரந்தரமும் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லாலுபிரசாத் யாதவ், அவருடைய மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, இளைய மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரெயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய. விசாரணைக்கு நேரில் ஆஜராக தேஜஸ்வி யாதவ் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில், அவரை கைது செய்யமாட்டோம் என்று கடந்த 16-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அமைப்பு உறுதி அளித்து இருந்தது.

இதனை அடுத்து, தேஜஸ்வியின் வழக்கறிஞரான மணீந்தர் சிங், தேஜஸ்வி சி.பி.ஐ. முன் 25-ந்தேதி (இன்று) ஆஜராவார் என்று கோர்ட்டில் உறுதி கூறினார். இதனை தொடர்ந்து, சி.பி.ஐ. முன் இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவ் இன்று நேரில் ஆஜராக கூடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்