லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடி பறிமுதல் - சி.பி.ஐ. அதிரடி
|உத்தரபிரதேசத்தில் லஞ்ச வழக்கில் கைதான ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.2½ கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் நகரில் வடகிழக்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை பொருள் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜோஷி. இவர் வடகிழக்கு ரெயில்வேக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தனக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் தராவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த ஒப்பந்ததாரர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் கேட்டதை உறுதிப்படுத்தினர்.
இதை தொடர்ந்து, அவரை பொறி வைத்து பிடிக்க திட்டம் தீட்டிய சி.பி.ஐ. அதிகாரிகள் ஜோஷியிடம் ரூ.3 லட்சத்தை லஞ்சமாக கொடுக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கூறினர். அதன்படி நேற்று முன்தினம் ஜோஷி ஒப்பந்ததாரரிடம் இருந்து லஞ்சம் வாங்கியபோது அவரை அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர்.
இந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைதான ஜோஷியின் வீடு உள்பட கோரக்பூர் மற்றும் நொய்டாவில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து ரூ.2.61 கோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.