தொடர் விபத்துகள் எதிரொலி: ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
|கவாச் 4.0 பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வேயில் சமீப காலமாக விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகின்றன.
கடந்த 17-ம்தேதி கூட மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயிலுடன் சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. எனவே ரெயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில்வே பாதுகாப்பு அமைப்பு குறித்து ஆய்வு செய்தார்.
குறிப்பாக கவாச் 4.0 பதிப்பு உருவாக்கம் குறித்து விரிவாக அவர் ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த அமைப்பு தயாரானவுடன் போர்க்கால அடிப்படையில் நிறுவ வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார். கவாச் 4.0 அமைப்பு, ரெயில் பாதுகாப்பில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே முக்கியமான தடங்களில் கவாச் 3.2 பதிப்பு நிறுவப்பட்டு வரும் நிலையில், கவாச் 4.0 பதிப்பு தயாரானதும் இரு பாதுகாப்பு அமைப்புகளும் ஒரே நேரத்தில் நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.