மனைவி, 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை
|மத்திய பிரதேசத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டதில் உள்ள சிஹோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரெயில்வே ஊழியரான நரேந்திர சதார். இவரது மனைவி ரீனா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் நரேந்திர சதார், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் சிஹோடா கிராமத்தில் உள்ள பெடாகட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ரெயில் தண்டவாளம் அருகே இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. அதே இடத்தில் நரேந்திர சதாரின் இருசக்கர வாகனமும் நின்றுள்ளது.
இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உயிரிழந்த ரீனாவின் தந்தை கூறுகையில், தனது மகள் ரீனா நேற்று தன்னை தொலைபேசியில் அழைத்து அவருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தார் என்றும், இதனை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.