டெல்லி சுகாதார மந்திரியிடம் சோதனை; ரூ.2.82 கோடி, 133 தங்க காசுகள் பறிமுதல்: அமலாக்க துறை நடவடிக்கை
|டெல்லி சுகாதார மந்திரியிடம் அமலாக்க துறை நடத்திய சோதனையில், ரூ.2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 133 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினை அமலாக்க துறையினர் கடந்த மே மாதம் இறுதியில் கைது செய்தனர்.
இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறும்போது, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரிலேயே மந்திரி சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே கெஜ்ரிவாலும், சத்யேந்தர் ஜெயினும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதன்பின்னர், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அளித்த பேட்டியில்,சத்யேந்தர் ஜெயின் மீது போடப்பட்ட வழக்கு முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்டது.
எங்கள் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் மிகவும் நேர்மையானவை. நீதித்துறையின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். சத்யேந்தர் ஜெயின் குற்றமற்றவராக வெளியே வருவார். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு நீடிக்காது என்று கூறினார்.
இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினை வருகிற 9ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், டெல்லி சுகாதார மந்திரி மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை நேற்று சோதனை நடத்தியது. ஒரு நாள் முழுவதும் நடந்த இந்த சோதனையில், ரூ.2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்க காசுகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.