< Back
தேசிய செய்திகள்
அமெரிக்க எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
தேசிய செய்திகள்

அமெரிக்க எம்.பி. உமருடன் சந்திப்பு.. ஆபத்தான செயல்களில் ராகுல் ஈடுபடுகிறார்: பா.ஜ.க. கடும் கண்டனம்

தினத்தந்தி
|
11 Sept 2024 5:23 PM IST

ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்குவதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறார். பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டதாகவும் கூறினார். பிரதமர் மோடி மீதும் விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அதில் ஒருவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இல்ஹான் உமர். இவர், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர். இவரை ராகுல் காந்தி சந்தித்ததற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் விவாதப்பொருளாகி உள்ளது.

ராகுல் காந்தி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற நபர்களை சந்திப்பதன் மூலம் "ஆபத்தான மற்றும் விஷமத்தனமான" செயல்களில் ஈடுபடுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இதற்கு முன்பு ராகுல் காந்தி குழந்தைத்தனமான செயல்களில் ஈடுபட்டார். ஆனால் இப்போது ஆபத்தான மற்றும் விஷமத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு எதிரான எம்.பி.யை சந்தித்து தனது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் கருத்துக்களால் பிரபலமடைந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஓமரை அவர் சந்தித்துள்ளார்.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் ஆதரவை ராகுல் பெற்றுள்ளார். இதன் மூலம், ராகுல் தனது இந்திய விரோத நண்பர்கள் பட்டியலில் மேலும் ஒரு புதிய நண்பரை சேர்த்துள்ளார்.

ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்குகிறார். அமெரிக்க எம்.பி. உமர் உள்ளிட்ட சில நபர்களுடனான அவரது சந்திப்பை மிக தீவிரமாக கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் ராகுல் காந்தியின் சந்திப்புகள் மற்றும் அவரது கருத்துக்களுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எம்.பி.க்களுடன் ராகுல் காந்தியின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ராகுல் காந்தி, இல்ஹான் உமர் ஆகியோரை வட்டமிட்டு காட்டியிருக்கிறார். அத்துடன், "காங்கிரஸ் இப்போது வெளிப்படையாக இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது" என்றும் கருத்து பதிவிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்