2 நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் நியாய யாத்திரையை தொடங்குகிறார் ராகுல்காந்தி
|நியாய யாத்திரை, நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும் என மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சர்க்கார் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். இந்தநிலையில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை 2 நாட்கள் இடைவெளியை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் இருந்து மீண்டும் தொடங்குகிறது.
ராகுல்காந்தி இன்று காலை 11.30 மணிக்கு சிலிகுரியில் உள்ள பாக்தோரா விமான நிலையத்தை வந்தடைவார். அதைத் தொடர்ந்து, அவர் ஜல்பைகுரிக்குச் செல்வார் அங்கிருந்து யாத்திரையை மீண்டும் தொடங்குவார் என்று மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சர்க்கார் கூறியுள்ளார்.
இந்த முறை யாத்திரை, நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும். இன்று இரவு சிலிகுரி பகுதியில் உறக்கத்திற்காக யாத்திரை நிறுத்தப்படும் என்றார். மேலும் நாளை பீகாருக்குள் நுழைவதற்கு முன்பு உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூருக்குச் செல்லும் என அவர் கூறினார்.