ராகுல்காந்தியின் புதிய லுக்: இணையத்தில் வைரல்
|தனக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று ரேபரேலி தொகுதி பிரசாரத்தில் ராகுல்காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலி,
ரேபரேலியில் உள்ளூர் கடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாடியை 'டிரிம்' செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்டம் மே 20-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ரேபரேலியில் போட்டியிட தனது வேட்புமனுவை கடைசி நாளில் தாக்கல் செய்த ராகுல் காந்தி, அந்த தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, எனது குடும்பத்துக்கு ரேபரேலி மக்களுடன் ஆழமான தொடர்புள்ளது. இதனால் நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் ரேபரேலி மக்களுக்காக எப்போதும் உழைத்து வந்துள்ளது. ஆனால் தொழிலதிபர்கள் அம்பானிக்காகவும், அதானிக்காகவும் பிரதமர் மோடி உழைக்கிறார். என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர், ''உங்கள் திருமணம் எப்போது?'' என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் அளிக்குமாறு ராகுல்காந்தியிடம் பிரியங்கா கேட்டுக்கொண்டார். கேள்வி சரியாக காதில் விழாததால், உற்று கவனித்து புரிந்து கொண்ட ராகுல்காந்தி, ''விரைவில் நடக்கும்'' என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரேபரேலியில் உள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று மாலை காரை நிறுத்திய ராகுல் காந்தி தனது தாடியை 'டிரிம்' செய்து கொண்டார். ராகுல்காந்தியின் புதிய லுக்கின் புகைப்படங்களை பகிர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவரின் எளிமை ஈடு இணையற்றது என புகழ்ந்து வருகின்றனர்.