செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ராகுல்காந்தி ஐரோப்பா பயணம்
|காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடுத்த மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார். 5 நாட்கள் பயணமாக அவர் செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்.
மறுநாள் (8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார். 9-ந் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்திய வம்சாவளியினர்
பின்னர், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார். அங்கு 10-ந் தேதி, இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்திய வம்சாவளி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த ஆண்டு ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாட்டை நடத்துகிறது. அந்த மாநாடு நடக்கும் நேரத்தில், ராகுல்காந்தி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருப்பார்.