குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு!
|அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி முறையீடு செய்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, ராகுல் காந்தி தான் 19 ஆண்டுகளாக தங்கியிருந்த, அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்தார்.
இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தி அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.