< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் ராகுல் காந்தி 15-வது நாளாக பாதயாத்திரை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இன்று வாக்களிக்கிறார்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 15-வது நாளாக பாதயாத்திரை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இன்று வாக்களிக்கிறார்

தினத்தந்தி
|
17 Oct 2022 5:19 AM IST

கர்நாடகத்தில் ராகுல் காந்தி 15-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையில் கொடி பிடித்தபோது மின்சாரம் தாக்கி 4 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை அங்கிருந்து கேரளா சென்றது. அங்கு 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே மாதம் 30-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்திற்கு வந்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா வழியாக பல்லாரிக்கு சென்றது. நேற்று முன்தினம் பல்லாரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி பேசினார். அதைத்தொடர்ந்து அவர் அதே மாவட்டத்தில் உள்ள சங்கனகல் கிராமத்தில் தங்கினார்.

மின்சாரம் தாக்கியது

இந்த நிலையில் ராகுல் காந்தியின் 39-வது மற்றும் கர்நாடகத்தில் 15-வது பாதயாத்திரை நேற்று காலை பல்லாரி மாவட்டம் சங்கனகல் கிராமத்தில் இருந்து தொடங்கியது. 13 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்ற நிலையில் காலை 10 மணிக்கு மோகா கிராமத்தில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பாதயாத்திரை அங்கிருந்து மீண்டும் தொடங்கியது. 7 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்ற நிலையில் சிண்டுவாலா கிராமத்தில் நிறைவடைந்தது.

அங்கிருந்து ராகுல் காந்தி 21 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து சங்கனகல்லு கிராமத்தில் உள்ள கே.பி.ஆர்.லே-அவுட்டுக்கு சென்றார். அத்துடன் பாதயாத்திரை நிறைவடைந்தது. நேற்று இரவு அவர் அந்த பகுதியில் தங்கினார். நேற்றைய பாதயாத்திரையின்போது, மோகா கிராமத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந் தது. அப்போது கொடிகளை தூக்கி பிடித்தபோது மின்கம்பி மூலம் மின்சாரம் தாக்கியது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சிறிது பரபரப்பு

உடனடியாக அவர்கள் 4 பேரும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பாதயாத்திரையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதயாத்திரையில் ஒரு பெண் திடீரென புகுந்து ராகுல் காந்தியின் அருகே வர முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பாதயாத்திரையின்போது ராகுல் காந்தியை வழக்கம் போல் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் சந்தித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) பாதயாத்திரை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தங்கும் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடியில் ராகுல் காந்தி மற்றும் அவருடன் தங்கும் நிர்வாகிகளும் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்