'ரேபரேலியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார்' - அமித்ஷா
|ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.
காந்திநகர்,
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார்.
பா.ஜ.க. சார்பில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதே சமயம் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக குஜராத் மாநிலம் போடேலி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி வயநாட்டுக்கு சென்றார். இந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற முடியாது என்பதை புரிந்துகொண்ட ராகுல் காந்தி, அமேதிக்கு பதிலாக ரேபரேலியில் போட்டியிடுகிறார். பிரச்சினை தொகுதியில் இல்லை, ராகுல் காந்தியிடம்தான் உள்ளது. இந்த முறை ரேபரேலியில் ராகுல் காந்தி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவார். அவர் எங்கு ஓடினாலும் மக்கள் அவரை கண்டுகொள்வார்கள்.
பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இடஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார் என காங்கிரஸ் கட்சியினர் ஒரு பொய்யை பரப்பி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் நீக்க முடியாது."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.